“உங்களது அலட்சியம், கல்லூரி மாணவியின் உயிரை பறித்துவிட்டது” மந்திரி சி.டி.ரவி மீது இளம்பெண் சாடல் - வீடியோ வைரல்

சிக்கமகளூருவில், குண்டும், குழியுமான சாலையில் தனது தந்தையுடன் ஸ்கூட்டரில் பயணித்தபோது கல்லூரி மாணவி ஒருவர் தவறி விழுந்து பலியானார். இந்த நிலையில் அந்த மாணவியின் சாவுக்கு மந்திரி சி.டி.ரவியின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி இளம்பெண் ஒருவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2019-11-05 23:00 GMT
சிக்கமகளூரு,

சிக்கமகளூரு டவுனில் நேற்று முன்தினம் குண்டும், குழியுமான சாலையில் தனது தந்தையுடன் ஸ்கூட்டரில் பயணித்து சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவியான சிந்துஜா பரிதாபமாக தவறி விழுந்து பலியானார். இச்சம்பவம் தற்போது சிக்கமகளூருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் விபத்தில் பலியான மாணவிக்கு இரங்கல் தெரிவித்து மந்திரியும், சிக்கமகளூரு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.டி.ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.

அதை சமூக வலைத்தளத்தில் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஒரு இளம்பெண், மந்திரி சி.டி.ரவிக்கு எதிராக பேசி ஒரு வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அந்த பெண் கூறியிருப்பதாவது:-

மந்திரி சி.டி. ரவி அவர்களே!, மாணவி சிந்துஜா இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து உள்ளர்களே அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?. சிந்துஜாவின் சாவு விபத்தினால் நிகழ்ந்தது அல்ல, உங்களது பொறுப்பற்ற அலட்சியத்தினால் நடந்தது. அவர் சாவுக்கு இரங்கல் தெரிவிக்க உங்களுக்கு எப்படி மனது வந்தது. சிந்துஜாவின் சாவு உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?. உங்கள் அலட்சியத்தால் ஒரு இளம்பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது உங்களது அறிவுக்கு எட்டவில்லையா?.

அவர் சாவுக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு உங்கள் பொறுப்பில் இருந்து நீங்கள் தப்பி விட முடியாது. உங்களுக்கு ஒரு உயிரின் விலை தெரியுமா?. உங்களுக்கு உயிரின் விலை தெரியாது. அதனால்தான் மாணவி சிந்துஜாவின் சாவுக்கு சுலபமாக இரங்கல் தெரிவித்துள்ளர்கள்.

இவ்வாறு அந்த பெண் கூறுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மந்திரி சி.டி.ரவிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் பலர், ‘மற்றவர்களின் தொகுதி வளர்ச்சிப் பணி குறித்து விமர்சிக்கும் நீங்கள் முதலில் உங்களுடைய தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்?‘ என்றும், ‘இன்னொரு உயிரிழப்பு ஏற்படுவதற்குள் உடனடியாக சாலைகளை சீரமையுங்கள்‘ என்றும், ‘நீங்கள் சரியாக வேலை பார்த்து இருந்தால் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது‘ என்றும் மந்திரி சி.டி.ரவிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே சிந்துஜாவின் சாவுக்கு பொறுப்பேற்று சி.டி.ரவிவை உடனடியாக மந்திரி பதவியில் இருந்து பா.ஜனதா நீக்க வேண்டும் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரி நேற்று சிக்கமகளூரு டவுன் மங்களூரு சாலையில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குண்டும், குழியுமான சாலையில் செடிகளை நட்டும், அவற்றின் அருகே மந்திரி சி.டி.ரவியின் உருவப் படத்தை வைத்தும் போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்