ஈரோடு கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஈரோடு கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.31¾ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்ததுடன், 5 அதிகாரிகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு பவானிரோடு அசோகபுரத்தில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் 3 சதவீதத்தை லஞ்சமாக அதிகாரிகள் பெற்று வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று திடீர் சோதனையை தொடங்கினார்கள். அப்போது அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் போலீசார் எடுத்து பார்வையிட்டனர். மேலும், அலுவலகத்தில் இருந்த பணத்தையும் எடுத்து வரவு-செலவு கணக்குகளை அதிகாரிகள் சரிபார்த்தனர்.
இதேபோல் அசோகபுரம் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.28 லட்சத்து 51 ஆயிரத்து 480 சிக்கியது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். மேலும், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நேற்று முன்தினம் இரவு முடிவுக்கு வந்தது.
ஆனால் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இரவிலும் சோதனை தொடர்ந்தது. அப்போது பெண் ஊழியர்களை மட்டும் வீட்டுக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். மற்ற அதிகாரிகளையும், ஊழியர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இரவு முழுவதும் விடிய, விடிய சோதனை தொடர்ந்தது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடந்தது. இதையொட்டி அலுவலகத்தின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சோதனை மதியம் 1 மணிஅளவில் நிறைவு பெற்றது. இதன் முடிவில் ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 890 கைப்பற்றப்பட்டது. எனவே சோதனையில் மொத்தமாக கணக்கில் வராத ரூ.31 லட்சத்து 83 ஆயிரத்து 370 பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக ஈரோடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன், துணிநூல் கட்டுப்பாட்டு அதிகாரி பழனிக்குமார், கைத்தறி அதிகாரி கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன அலுவலக மேலாளர் ஜோதி என்கிற ஜோதிலிங்கம், அசோகபுரம் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் கணக்காளர் செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.