பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: சுபாஷ் பண்ணையார் உள்பட 14 பேர் கோர்ட்டில் ஆஜர்
பசுபதி பாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 14 பேர் திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் ஆஜராகினர்.
திண்டுக்கல்,
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன். இவர், திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனப்பட்டியில் வசித்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு வீட்டின் அருகே பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த கொலை குறித்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகேயுள்ள மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், முத்தையாபுரம் அருளானந்தம், நெல்லை சுரண்டையை சேர்ந்த ஆறுமுகசாமி, ராஜபாளையம் சண்முகம், புறா மாடசாமி, திண்டுக்கல் அருகேயுள்ள கரட்டழகன்பட்டியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முத்துப்பாண்டியன், நந்தவனப்பட்டி நிர்மலா உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் முத்துப்பாண்டியன், ஆறுமுகசாமி, புறா மாடசாமி, பாட்சா என்ற மாடசாமி ஆகிய 4 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணை வரும் போது, கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அதன்படி பசுபதி பாண்டியன் கொலை வழக்கு நேற்று திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கோர்ட்டு கட்டிடத்தின் 2 வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே சுபாஷ் பண்ணையார் உள்பட 14 பேர் நீதிபதி சுதாகர் முன்னிலையில் கோர்ட்டில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சுதாகர் உத்தரவிட்டார்.