மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு: சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு; அமித்ஷா-பட்னாவிஸ் ஆலோசனை
பாரதீய ஜனதா-சிவசேனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மராட்டியத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், சோனியா காந்தியை சரத்பவார் சந்தித்து பேசினார். இதேபோல் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மும்பை,
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 161 இடங்களை வென்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆட்சி அமைப்பதில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஆட்சியில் சமபங்கும், சுழற்சி முறையில் 2½ ஆண்டுக்கு முதல்-மந்திரி பதவியும் வழங்க வேண்டும் என சிவசேனா நிர்ப்பந்தம் செய்து வருகிறது.
இதை ஏற்க மறுக்கும் பாரதீய ஜனதா, தேவேந்திர பட்னாவிசை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவதில் உறுதியாக இருக்கிறது.
இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 12 நாட்கள் ஆகியும் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
தங்கள் கோரிக்கையை பாரதீய ஜனதா ஏற்காத பட்சத்தில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என சிவசேனா மிரட்டி வருகிறது. சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைய 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறது.
பாரதீய ஜனதா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனா மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
இதனால் மராட்டியத்தில் புதிய அரசு பாரதீய ஜனதா தலைமையில் அமையுமா? அல்லது சிவசேனா தலைமையில் அமையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது.
அப்போது, மராட்டியத்தில் புதிய அரசு அமைப்பதில் பாரதீய ஜனதா-சிவசேனா இடையே ஏற்பட்டு இருக்கும் இழுபறி நீடித்து வருவது குறித்தும், அதனால் எழுந்துள்ள சூழ்நிலைகள் பற்றியும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியே வந்தால் அந்த கட்சி ஆட்சி அமைக்க காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி இரு தலைவர்களும் ஆலோசித்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய சரத்பவார், மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது பற்றி தாங்கள் எதுவும் ஆலோசிக்கவில்லை என்றும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் பலம் குறித்தும் மற்றும் தங்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருக்கும் சில சுயேச்சைகள் பற்றியும் சோனியாவிடம் கூறியதாக தெரிவித்தார்.
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதற்கான பொறுப்பு பாரதீய ஜனதாவுக்குத்தான் உள்ளது என்று கூறிய சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்குத்தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்றும், ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என சொல்ல முடியாது என்றும் அப்போது தெரிவித்தார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவோ அல்லது அக்கட்சியைச் சேர்ந்த வேறு யாருமோ இதுவரை தேசியவாத காங்கிரசிடம் ஆதரவு கேட்கவில்லை என்றும் பேட்டியின் போது அவர் கூறினார்.
‘‘ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது தொடர்பாக பாரதீய ஜனதா-சிவசேனா இடையே பேரம் நடந்து வருவதாக கருதுகிறீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘‘தீவிரமாக நடந்து வருவதாகத்தான் நினைக்கிறேன்’’ என்று சரத்பவார் பதில் அளித்தார்.
‘‘நீங்கள் மீண்டும் மராட்டிய முதல்-மந்திரி ஆக வாய்ப்பு உள்ளதா?’’ என்று கேட்டதற்கு, ‘இல்லை’ என்று சரத்பவார் பதில் அளித்தார்.
இதேபோல் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று டெல்லியில் பாரதீய ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மராட்டியத்தில் விரைவில் புதிய அரசு அமையும் என்று தெரிவித்தார். ஆனால் அதில் சிவசேனா இடம்பெறுமா என்பது பற்றி எதுவும் கூறவில்லை. மற்றபடி அமித்ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
ஆட்சியமைக்கும் ‘பந்து’ தற்போது சிவசேனா வசம் இருப்பதால், இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து நிலைமையை கவனிக்க பாரதீய ஜனதா முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அமித்ஷாவுடன் சந்திப்பின்போது, மராட்டியத்தில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு நிவாரண நிதி கோரும் மனு ஒன்றையும் தேவேந்திர பட்னாவிஸ் அளித்தார்.
இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி., சிவசேனா மந்திரி ராம்தாஸ் கதம் ஆகியோர் நேற்று மாலை திடீரென மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்கள்.
இந்த சந்திப்பு குறித்து பின்னர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் பற்றி கவர்னருடன் பேசியதாகவும், புதிய அரசு அமைவதில் ஏற்பட்டு உள்ள குழப்பத்திற்கு சிவசேனா காரணம் அல்ல என்று அவரிடம் விளக்கியதாகவும் தெரிவித்தார்.
யாருக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதோ அவர்களைத்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
தற்போதைய மராட்டிய சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 9-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள இழுபறி நிலை முடிவுக்கு வராத பட்சத்தில், பாரதீய ஜனதா 105 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்குவதால், ஆட்சி அமைக்க வருமாறு அந்த கட்சிக்குத்தான் கவர்னர் முதலில் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.