பாரதீய ஜனதா அரசு அமைய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ஆதரவு; சுயேச்சை எம்.எல்.ஏ. கூறுகிறார்

பாரதீய ஜனதா அரசு அமைய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ஆதரவு அளிக்க இருப்பதாகவும், அவர்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும் சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணா கூறினார்.

Update: 2019-11-05 00:17 GMT
மும்பை, 

மராட்டியத்தில் அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டு உள்ள நிலையில், அமராவதி மாவட்டம் பட்நேரா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரவி ராணா எம்.எல்.ஏ., பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளித்துள்ளார். இவர் நேற்று தனது மனைவி நவ்தீன் கவுர் ராணாவுடன் கவர்னர் பகவத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவசேனா கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் ஆணவத்துடன் செயல்படுகிறது. இதனை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆய்வு செய்யவேண்டும்.

சிவசேனாவை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதா அரசு அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து என்னுடன் தொடர்பில் உள்ளனர். முதல்-மந்திரி பட்னாவிஸ் சிவசேனா ஆதரவு இன்றி ஆட்சி அமைத்தால் அடுத்த 2 மாதத்தில் சிவசேனா வில் பிளவு ஏற்படும். 25 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைவார்கள்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் என்ன சொன்னாலும் பரவாயில்லை. மக்கள் அளித்த தீர்ப்பு பா.ஜனதா கூட்டணி கட்சிகளுக்கானது, தனிப்பட்ட எந்த கட்சிக்குமானது இல்லை என்பதை உத்தவ் தாக்கரே புரிந்துகொள்ள வேண்டும். சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் வலுவான அறிக்கைகளை வெளியிடுவதால் அவரை உத்தவ் தாக்கரே கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரவி ராணா காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் தொடர்ந்து 3-வது முறையாக சுயேச்சையாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்