‘செல்பி’ மோகத்தால் நேர்ந்த சோகம்: திருமணம் நிச்சயமான இளம்பெண் கிணற்றுக்குள் தவறி விழுந்து சாவு

கிணற்றின் சுற்றுச்சுவரில் சாய்ந்து நின்றபடி ‘செல்பி’ எடுத்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்ததால் கிணற்றுக்குள் தவறி விழுந்து இளம்பெண் பலியானார். அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த வாலிபர் உயிர் தப்பினார்.

Update: 2019-11-04 21:30 GMT
பூந்தமல்லி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம், நவஜீவன் நகரைச் சேர்ந்தவர் தாஸ். இவருடைய மகன் அப்பு(வயது 24). பட்டாபிராம் காந்திநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகள் மெர்சி(22). உறவினர்களான இவர்கள் இருவரும் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

அப்புவுக்கும், மெர்சிக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். செப்டம்பர் மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜனவரி மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

நேற்று மாலை அப்பு, மெர்சி இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினர். செல்லும் வழியில் முத்தாபுதுபேட்டை, கண்டிகை பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் அருகே சாய்ந்து நின்றபடி இருவரும் தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்தனர்.

அப்போது திடீரென கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மெர்சி, நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பு, தனக்கு நீச்சல் தெரியாது என தெரிந்தும், தனது வருங்கால மனைவியை காப்பாற்ற வேண்டும் என நினைத்து கிணற்றில் குதித்தார். ஆனால் அதற்குள் மெர்சி, நீருக்குள் மூழ்கி விட்டதால் அப்புவால் காப்பாற்ற முடியவில்லை.

கிணற்றில் உள்ள படிக்கட்டை பிடித்துக்கொண்டு அப்பு கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு அங்கு விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த சடகோபன் என்ற விவசாயி ஓடிவந்து பார்த்தார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் கிணற்றுக்குள் குதிக்காமல் நீளமான கம்பை கொடுத்து, அப்புவை மட்டும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

இதுகுறித்து ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் மூழ்கிய மெர்சியை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், மெர்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அப்புவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

‘செல்பி’ மோகத்தால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்