மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

சேலம் மாவட்டத்தில் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-11-04 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்ட மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 1998-ம் ஆண்டுக்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும். 2008-ம் ஆண்டுக்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாவட்ட தலைவர் நல்லதம்பி, செயலாளர் சுரேஷ்குமார், துணைசெயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கோரிக்கை குறித்து மனு கொடுப்பதற்காக உடையாப்பட்டியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் மேற்பார்வை பொறியாளர் சண்முகத்திடம் மனு கொடுத்தனர்.

போராட்டம் தொடரும்

இதன்பின்னர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- நாங்கள் 20 ஆண்டுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். பல பேரிடர் காலங்களில் கடுமையான வேலை செய்து வந்தோம். இதைத்தொடர்ந்து ரூ.380 கூலி வழங்கி, உங்களுக்கான பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அளிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக போராட்டம் நடத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் தான் கடந்த 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி இருக்கிறோம். அதன் அடிப்படையில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வேலைக்கான உத்தரவாதம் வரும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்