ஜே.சி.பி. எந்திரம் மோதியதில், கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நிறைமாத கர்ப்பிணி பலி

சிங்கம்புணரியில் ஜே.சி.பி. எந்திரம் மோதியதில் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற நிறைமாத கர்ப்பிணி பரிதாபமாக பலியானார்.

Update: 2019-11-04 23:15 GMT
சிங்கம்புணரி,

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், மணப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் கதிரேசன் திருப்பதி (வயது 30). இவருக்கும், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த கனிமொழி (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது கனிமொழி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். வருகிற 10-ந் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று கனிமொழி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சிங்கம்புணரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றார்.

பின்னர் அங்கு பரிசோதனை முடிந்து அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அரணத்தங்குண்டு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த ஜே.சி.பி எந்திரம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கனிமொழி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். உடனே அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

பின்னர் கனிமொழியின் உடலை தூக்கிக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் குழந்தையை உயிருடன் மீட்க போராடினர்.

நீண்ட போராட்டத்திற்கு இடையே குழந்தை இறந்தே பிறந்தது. விபத்தில் நிறைமாத கர்ப்பிணி குழந்தையுடன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்தது ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. எந்திர டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சிங்கம்புணரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையாக ஆக்கப்பட்ட திருப்பத்தூர்-திண்டுக்கல் சாலை பல மாதங்களாக மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் தினமும் ஒரு விபத்து நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

எனவே இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்