சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணிக்கு திரும்பினர், வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அனைவரும் வழக்கம்போல் நேற்று பணிக்கு திரும்பினர்.

Update: 2019-11-01 22:30 GMT
சேலம்,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த டாக்டர்கள் 90 சதவீதம் பேர் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. சேலத்தில் 7 நாட்களாக அரசு டாக்டர்களின் போராட்டம் நீடித்து வந்தது. அதேசமயம் ஏழை, எளிய மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பாதிக்கப்படுவதால் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த இடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவித்து புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களில் சிலர் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப் பட்டனர்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவது என்று டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு டாக்டர்கள் அனைவரும் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை கைவிட்டு நேற்று காலை முதல் பணிக்கு திரும்பினர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனைத்து பிரிவுகளிலும் ஆண் மற்றும் பெண் டாக்டர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்து நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும், அவர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

இதனால் அவசர சிகிச்சை, காய்ச்சல் பிரிவு, எலும்பு முறிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு, சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம், சித்த மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் பிரிவு என அனைத்து பிரிவுகளிலும் டாக்டர்கள் பணியில் இருந்ததால் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்