கனகபுரா மருத்துவ கல்லூரியை இடம் மாற்றுவதன் மூலம் எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறார் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

கனகபுரா மருத்துவ கல்லூரியை இடம் மாற்றுவதன் மூலம் முதல்-மந்திரி பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார்.;

Update: 2019-10-31 23:36 GMT
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இந்திரா காந்தி நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதுபோல் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. இதில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதில் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

கனகபுராவில் அரசு மருத்துவ கல்லூரியை தொடங்குவது எனது வாழ்நாள் குறிக்கோள். ஒருவேளை இதற்கு மாநில அரசு அரசியல் ரீதியாக குறுக்கீடு செய்தால் அதை சகித்துக்கொண்டு நான் அமைதியாக இருக்க மாட்டேன். குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது முதல்-மந்திரியாக உள்ள எடியூரப்பா, கனகபுராவுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்லூரியை சிக்பள்ளாப்பூருக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். கட்சியில் புதிதாக சேர்ந்தவருக்கு பரிசு அளிக்கும் விதத்தில் மருத்துவ கல்லூரியை இடம் மாற்றுவது என்பது சரியல்ல. இதன் மூலம் எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறார்.

யாருக்கும் ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல. அதனால் கனகபுராவுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்லூரியை மீண்டும் அங்கேயே தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்பள்ளாப்பூருக்கு மேலும் ஒரு புதிய மருத்துவ கல்லூரியை தொடங்கட்டும். அதற்கு எங்களின் ஆட்சேபனை இல்லை.

காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. அவ்வளவு பெரிய வரலாறு காங்கிரசுக்கு உள்ளது. கட்சியில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கட்சியில் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம். அனைத்து வர்க்கத்தினரையும் சமமாக அரவணைத்து சென்றால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அனைத்து சாதியினரும் ஆட்சிக்கு வந்தது போல் ஆகும். இவ்வாறு டி.கே.சிவக் குமார் பேசினார்.

மேலும் செய்திகள்