சேலத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர், அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

சேலத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர், அரசு ஊழியர் வீட்டில் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-10-31 22:15 GMT
சேலம்,

சேலம் சின்னதிருப்பதி அருகே உள்ள சந்தோஷ்நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 71). இவர் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அண்ணாமலை வீட்டின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் சென்னையில் உள்ள அண்ணாமலைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதையொட்டி அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2½ பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

அதே பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (71). இவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பல்லடத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அண்ணாமலை, பொன்னுசாமி ஆகிய 2 பேரும் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்