பலத்த மழை வேகமாக நிரம்பி வரும் பூண்டி ஏரி
புலத்த மழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆந்திர அரசு தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டது. பின்னர் வினாடிக்கு 1,300 கனஅடியாக குறைக்கப்பட்டது.
பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்தால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த மாதம் 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 11-ந் தேதி புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
முழு கொள்ளளவை எட்டும்
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 29.60 அடியாக பதிவாகியது. 1,648 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 516 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 23 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 549 கனஅடி வீதமும், மழை நீர் வினாடிக்கு 771 கனஅடி வீதமும் வந்து கொண்டிருந்தது. நீர் வரத்து இதே போல் தொடர்ந்தால் பூண்டி ஏரி இன்னும் ஒரு வாரத்தில் வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.