5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.;

Update: 2019-10-31 23:15 GMT
கரூர்,

கரூரில் நடைபெறுகிற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வருகை புரிந்து தங்களது படைப்புகளை வைத்துள்ளனர். இதற்காக 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதனை காணும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவியல் கண்காட்சி மூலம் மாணவர்களின் அறிவியல் சிந்தனை மேம்பட்டு எதிர்காலத்திற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகள் வர வாய்ப்புள்ளது. இதில் வெற்றிபெறுவோர் தென்இந்திய அளவிலும், அகில இந்திய அளவிலும் நடைபெறுகிற கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.

1,000 பள்ளிகளில் நவீன ஆய்வகம்

இதேபோல் மாணவர்களை பின்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பி அங்குள்ள அறிவியல், கலை, பண்பாடு குறித்து அறிந்து கொள்ளவும் கல்வித்துறை சார்பில் வழிவகை செய்யப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சில மாணவர்கள் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 100 மாணவர்கள் ஆண்டுதோறும் ரூ.3 கோடி செலவில் இதுபோன்ற கல்விமேம்பாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவர்.

மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கும் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் நவீன வகையிலான ‘அட்டல் டிங்கர்’ ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான பணிகள் ஜனவரி இறுதிக்குள் நிறைவுபெறும்.

தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது அனைவருக்கும் கல்வி என்கிற அடிப்படையில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு இந்த மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதுவார்கள். 100 சதவீதம் அவர்களது தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுவதும் தேர்வு நடைமுறை குறித்து ஆய்வு மேற்கொண்டு, கல்வியாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை கேட்டறிந்து அடுத்த கட்ட நட வடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே எந்த அச்சமும் மாணவர்களுக்கு தேவையில்லை. 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெறுவார்கள். பொதுத்தேர்வுமுறை என்பது மாணவர்களுக்கு சுமை என்று கூறுவது ஏற்புடையதல்ல. மாறாக அனைவருமே ஆண்டுதேர்வு எழுதி தான் அடுத்த வகுப்பிற்கு செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்