சென்னை மாநகரில் வரும் 10-ந்தேதிக்குள் வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் விவரத்தை அளிக்கவேண்டும் சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை மாநகரில் வீடுகளில் பயன்பாட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்த விவரத்தை வரும் 10-ந்தேதிக்கு முன்பாக சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கவேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.
சென்னை,
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் ஆழ்துளை கிணறுகளை புதிதாக தோண்டும்போது நீர்வராத காரணத்தால் அவற்றை சரியாக மூடாமல் கைவிட்டு விடுகின்றனர். இதுபோன்று பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அதன் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கவனக்குறைவால் சரியாக மூடாமல் இருப்பதால் சிலநேரங்களில் அவற்றில் குழந்தைகள் தவறி விழுந்து உயிருக்கு போராடி இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், ஆழ்துளை கிணறுகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்க சில வழிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
மூடவேண்டும்
அதன்படி சென்னை மாநகரில் வசித்துவரும் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாகவோ அல்லது களிமண், மணல், கருங்கற்கள், கூழாங்கற்கள் கொண்டு தரைமட்டம் வரை மூடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தொழில்நுட்ப ஆலோசனைபெற பொதுமக்கள் அருகில் உள்ள சென்னை குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் அல்லது 044-28454080 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
10-ந்தேதிக்குள் தகவல்
சென்னை பெருநகர நிலத்தடிநீர் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் உபயோகத்துக்காக வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் பற்றிய விவரங்களை தங்களது பிரிவுக்கு உட்பட்ட சென்னை குடிநீர் வாரிய பணிமனை அலுவலகத்தில் அதற்குரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வரும் 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது மிகவும் அவசியம் என்பதால், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொள்கிறது. தவறும்பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.