கொடைக்கானலில், பலத்த மழையால் நட்சத்திர ஏரி நிரம்பி கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கொடைக்கானலில் பலத்த மழையால் நட்சத்திர ஏரி நிரம்பி கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2019-10-29 22:30 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நட்சத்திர ஏரி மீண்டும் நிரம்பி ஏரிச்சாலையில் உள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவின்படி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

தொடர்மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததின் காரணமாக மேல்மலை கிராமமான மன்னவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை 10 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. அத்துடன் நகரில் உள்ள அப்சர்வேட்டரி பகுதியில் மாலை முதல் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனையடுத்து மின் வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையில் ஊழியர்கள் விரைந்து சென்று அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்மழை காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையும், புதிய அணையும் முற்றிலும் நிரம்பி உபரிநீர் அதிகளவில் செல்கிறது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோழா அருவி, பாம்பார் அருவி போன்றவற்றில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது.

இதனிடையே காலை முதலே மேக மூட்டத்துடன் மழை பெய்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பலர் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர்.

மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

மேலும் செய்திகள்