திருப்பத்தூர், கந்திலி ஒன்றியத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன
திருப்பத்தூர், கந்திலி ஒன்றியத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் அரசு உத்தரவின்பேரில் மூடப்பட்டன.
திருப்பத்தூர்,
மணப்பாறை அருகே மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சுஜித் (வயது 2) என்ற சிறுவன் பலியானான். இந்த சம்பவத்தின் எதிரொலியாக உயிர்ப்பலி வாங்கும் வகையில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் இதுபோன்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன.
அதன்படி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருணாபட்டு, காக்கனாம்பாளையம், குரிசிலாப்பட்டு, மிட்டூர், அண்ணான்ட்டபட்டி உள்ளிட்ட பல்வேறு 18-க்கும் மேற்பட்ட இடங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டன. இந்த பகுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலங்கிள்ளி, முருகேசன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கந்திலி, உடையாமுத்தூர், குனிச்சி, தோரண பதி, விஷமங்கலம் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, தயாளன் நேரில் சென்று பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளை மூடினர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி கூறுகையில், “கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. மேலும் விவசாய நிலங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருப்பதை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரசு, விவசாய மற்றும் தனியாருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும். அதன்படி ஊராட்சி செயலாளர்கள் அந்தந்த ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மூடவேண்டும். மேலும் மூடப்படாத ஆழ்துளைகிணறுகள் இருந்தால் அதன் விவரங்களை அணைக்கட்டு வட்டாரவளர்ச்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.