சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சி: புதுப்பேட்டையில் உணவகத்துக்கு ‘சீல்’ சுகாதாரமற்ற இறைச்சி - பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சியை தொடர்ந்து, சென்னை புதுப்பேட்டையில் உள்ள உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. சுகாதாரமற்ற இறைச்சி-பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
சென்னை புதுப்பேட்டையில் உள்ள ‘பிரண்ட்ஸ் புட் ஸ்பாட்’ எனும் உணவகத்துக்கு நேற்று முன்தினம் ஆயுதப்படை போலீஸ்காரர் சரவணன் என்பவர் சாப்பிட சென்றார். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகளவில் கடைக்காரர்கள் உபயோகப்படுத்தியதை பார்த்து, பிளாஸ்டிக் பைகளை ஏன் உபயோகம் செய்கிறீர்கள்? என்று அங்குள்ளவர்களை கேட்டார்.
அதற்கு கல்லா பெட்டிக்கு அருகில் உட்கார்ந்திருக்கும் பாஸ்கர் (கடை உரிமையாளரின் நண்பர்), ‘நீ போலீஸ் தானே, கார்ப்பரேசன் ஆள் இல்லையே... உனக்கு பதில் சொல்ல முடியாது. பதில் வேணும்னா நா சொல்ற இடத்துக்கு வா’, என்று ஒருமையில் பேசி, சரவணனின் செல்போன் எண்ணையும் எழுதி வாங்குகிறார். இந்த காட்சி அனைத்தையும் சரவணன் தனது செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
அதிகாரிகள் அதிரடி ஆய்வு
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில் ஓட்டலில் அதிகளவு பிளாஸ்டிக் பைகள் இருப்பதும், உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றியும் இருந்தது தெளிவாக தெரிந்தது.
இந்த வீடியோ காட்சி எதிரொலியாக தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என்.ராஜா, கண்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அதிகாரி ஆர்.கவுசல்யா, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கே.வாசுதேவன் உள்பட அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த ஓட்டலுக்கு வந்து அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர் எச்.யாஹியா தலைமையிலான போலீசாரும் பாதுகாப்புக்காக வந்தனர்.
இந்த ஆய்வில் சுகாதாரமற்ற இறைச்சிகள், நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட கோழிக்கறி துண்டுகள், முட்டைகள், முட்டை கோஸ் துண்டுகள், சப்பாத்தி, பரோட்டா, நான், ரொட்டி என உணவு பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
உணவகத்துக்கு ‘சீல்’
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக இந்த உணவகம் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாநகராட்சியின் முறையான உரிமம் இன்றி செயல்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து கெட்டுப்போன மற்றும் நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் மீது அதிகாரிகள் பிளச்சிங் பவுடர் தூவினர். அந்த உணவு பொருட்களை கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு மாசு ஏற்படாதவாறு அழிக்கப்பட்டது.
பின்னர் முறையான உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததற்காகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தியதற்காகவும் கடை உரிமையாளர் ஜாஹிர் உசேனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடையையும் மூடி மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். முன்னதாக ஆய்வின்போது அங்கிருந்து பாஸ்கர் என்பவரை அதிகாரிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாஸ்கர் அங்கிருந்து நைசாக கிளம்பிவிட்டார்.
நடவடிக்கை தொடரும்
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “எழும்பூரில் குறிப்பாக புதுப்பேட்டை பகுதிகளில் அதிகளவு உணவுபொருட்கள் மீதான புகார்கள் வருகின்றன. சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரிப்போர் மீது நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல சோதனை விரைவில் எல்லா கடைகளிலும் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான புகாரை 9444042322 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு அனுப்பலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றனர்.