சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே முதலூர் பஞ்சாயத்து கடாட்சபுரம் கிராம மக்கள் நேற்று காலையில் சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் செல்வியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், முதலூர் பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றுபவர், தமிழக அரசின் இலவச ஆடுகள், கோழிகள் வழங்கும் திட்டத்தில் தனது உறவினர்கள், நண்பர்களையே பயனாளிகளாக தேர்வு செய்கிறார். மேலும் அவர், அரசின் இலவச வீடுகள், கழிப்பறைகள் கட்டும் திட்டத்திலும் பொதுமக்களிடம் முறைகேடாக பணம் பெற்று, பயனாளிகளை தேர்வு செய்கிறார்.
மேலும் கடாட்சபுரம் கிராமத்தில் தாய் திட்டத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து, இதுவரையிலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படவில்லை. அந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து, பஞ்சாயத்து செயலாளர் தனது சொந்த ஊரான முத்துகிருஷ்ணாபுரம் வள்ளியம்மாள்புரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து வருகிறார்.
மேலும் முதலூர் பஞ்சாயத்தில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமலும், தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையிலும் உள்ளன. எனவே முதலூர் பஞ்சாயத்து செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்ட பயன்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்று கொண்ட யூனியன் ஆணையாளர் செல்வி, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.