ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை தப்பி ஓடிய அத்தை மகனுக்கு வலைவீச்சு

ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய அத்தை மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-10-29 23:00 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி (வயது 50). இவர், ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன்கள் பாபு(26), மாதவன்.

வேதவல்லியின் தம்பி பூபதியும், அவருடைய மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால் அவர்களது மகளான ஷோபனா(13) என்பவரை வேதவல்லி தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவருக்கு சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் 5-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார்.

வேதவல்லி தனது 2-வது மகன் மாதவன், தம்பி மகள் ஷோபனா ஆகியோருடன் இந்த வீட்டில் வசித்து வந்தார். மூத்த மகன் பாபு, திருமணமாகி தனது குடும்பத்துடன் அயனாவரத்தில் வசித்து வருகிறார். ஷோபனாவின் அக்கா மோனிஷாவுக்கு திருமணமாகி சின்னமலையில் கணவருடன் வசித்து வருகிறார்.

கத்தியால் குத்திக்கொலை

நேற்று காலை வேதவல்லி வேலைக்கு சென்றுவிட்டார். மாதவனும் வெளியே சென்று விட்டதால் சிறுமதி ஷோபனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மதியம் தனது தங்கையை பார்க்க மோனிஷா வீட்டுக்கு வந்தார். கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் கதவை திறந்து உள்ளே சென்றார்.

அங்கு ஷோபனா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது அத்தை வேதவல்லிக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக வேதவல்லி வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஷோபனாவின் கழுத்து, கை, இடுப்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஷோபனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரை யாரோ கத்தியால் குத்திக்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

வீட்டை கேட்டு தகராறு

இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன், ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வேதவல்லியின் முத்த மகன் பாபு, இந்த வீட்டை தனக்கு வேண்டும் என்று கேட்டு தாய் வேதவல்லியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், ஆனால் ஷோபனா இருப்பதால் இந்த வீட்டை யாருக்கும் தரமுடியாது என்று வேதவல்லி கூறியதாகவும் தெரிகிறது. மேலும் வேதவல்லி ஷோபனாவிடம் அதிக பாசத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வலைவீச்சு

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் பாபு, வேதவல்லி வீட்டுக்கு வந்துவிட்டு சென்றதை பார்த்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாபு தலைமறைவாகி விட்டதும் தெரிந்தது.

எனவே வீட்டை கேட்டு தாயிடம் தகராறு செய்து வந்த பாபு, வீட்டில் தனியாக இருந்த ஷோபனாவை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்து இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர். மேலும் ஷோபனா வீட்டில் தனியாக இருந்ததால் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆதம்பாக்கத்தில் பட்டப்பகலில் சிறுமி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்