இடிந்து விழும் நிலையில் உள்ள நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவெண்காடு அருகே ராதாநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2019-10-29 22:45 GMT
திருவெண்காடு,

திருவெண்காடு அருகே ராதாநல்லூர் கிராமத்தில் கிளை நூலகம் உள்ளது. கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்த கிளை நூலகத்தில் தற்போது சுமார் 20 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தில் 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நூலகத்திற்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். இந்த நூலகத்திற்கான கட்டிடம் கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் நூலக கட்டிடம் சேதமடைந்து, தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், கட்டிடங்களில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மழைநீர் கசிந்து உள்ளே செல்கிறது. இதனால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

நடவடிக்கை

தற்காலிகமாக மழைநீர் கசியாமல் இருக்க கட்டிடத்தின் மேற்கூரையில் தார்பாய்கள் போடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்று அச்சப்படுகின்றனர்.

எனவே, வாசகர்கள் நலன் கருதியும், புத்தகங்களை பாதுகாக்கும் வகையிலும் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும், அதுவரை வேறு கட்டிடத்தில் நூலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்