மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டால் நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டால் நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2019-10-29 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் முழுமையாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயன்படுத்தாத 100 ஆழ்துளை கிணறுகள் முழுமையாக மூடியிட்டு மூடப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நடந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆழ்துளை கிணறுகளை முழுமையாக மூடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளான திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு அரசு அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் மற்றும் ரிக் ஆபரேட்டர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் இது தொடர்பான புகார்களுக்கு 044-27664177 என்ற தொலைபேசி எண்ணுக்கு, வாட்ஸ்அப்பில் புகைப்படம் எடுத்து அனுப்புவதற்கு 9444317862 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்