காரிமங்கலம் அருகே, கார் மோதி 2 பேர் பலி - சிறுவன் படுகாயம்
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்றபோது கார் மோதி 2 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் சிறுவன் படுகாயம் அடைந்தான்.;
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43), கட்டிட மேஸ்திரி. இவருடைய நண்பர் மொலப்பனஅள்ளியை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன்(50). விவசாயி. இவருடைய பேரன் சித்தார்த்(8). இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் காரிமங்கலத்திற்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.
காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி சமத்துவபுரம் பஸ் நிறுத்தம் அருகில் இவர்கள் ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சென்னகிருஷ்ணன், சிறுவன் சித்தார்த் ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சென்னகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். சிறுவன் சித்தார்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.