பள்ளி பஸ்சில் எலிக்கு வைத்த, விஷ பிஸ்கட்டை சாப்பிட்ட மாணவன் சாவு

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே பள்ளி பஸ்சில் எலிக்கு வைத்த விஷ பிஸ்கட்டை சாப்பிட்ட மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-10-28 21:30 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பறையப்பட்டி புதூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் தரணிதரன் (வயது 12). சிறுவன் அரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் தினமும் பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்துள்ளான். சம்பவத்தன்று மாணவன் பள்ளிக்கு சென்ற போது பஸ்சில் இருந்த பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டு உள்ளான். 

பள்ளிக்கு சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து அவனை அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது பஸ்சில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் டிரைவர், கிளனர் ஆகியோர் பிஸ்கட்டில் விஷம் தடவி பஸ்சில் வைத்ததும், அதை மாணவன் எடுத்து சாப்பிட்டதால் இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் எலிக்கு வைத்த விஷ பிஸ்கெட்டை சாப்பிட்டு பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்