‘பிகில்’ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தியேட்டர் முன் ரசிகர்கள் போராட்டம்

‘பிகில்’ திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி தியேட்டர் முன் ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-28 23:00 GMT
திருவொற்றியூர்,

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளியையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. திருவொற்றியூரில் 2 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது. ஆனால் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் எதுவும் குறிப்பிடப்படாமல் நுழைவுச்சீட்டு என அச்சிடப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டது.

வழக்கத்தைவிட பலமடங்கு கூடுதலாக ஒரு டிக்கெட் 220 ரூபாய் வரை கவுண்ட்டர்களில் விற்கப்பட்டது. இதனால் படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தர்ணா போராட்டம்

இதனால் அவர்கள் தியேட்டர் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று 150-க்கும் மேற்பட்ட ரசிகர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் எங்களுக்கு டிக்கெட் வழங்கினால்தான் நாங்கள் தியேட்டரில் படத்தை ஓடவிடுவோம் எனக்கூறி தியேட்டர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தியேட்டர் நிர்வாகம் சார்பில் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் போலீசாருடன் வந்து சமாதான பேச்சில் ஈடுபட்டனர். ரசிகர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை நிர்வாகம் வசூல் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

போலீசாரின் சமரசத்தை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு மட்டும் ரூ.130 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு படம் பார்க்க சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்