செம்மஞ்சேரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஆயுர்வேத மாணவர் கைது
செம்மஞ்சேரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஆயுர்வேத மாணவர் கைது செய்யப்பட்டார்.;
ஆலந்தூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமிநகர் குடியிருப்பில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கிளினிக் செயல்பட்டு வருகிறது. சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சாதிக் (வயது 36) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக அங்கு சென்றார். டாக்டரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சாதிக் தன்னுடைய நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து அங்கு இருந்தவரிடம் டாக்டர் என்பதற்கான அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளனர்.
முன்னுக்கு பின் முரணாக பேசிய அவர் பின்னர் தனது அடையாள அட்டையை காட்டியுள்ளார். அவர் ஆயுர்வேதம் படிக்கும் மாணவர் என்பது தெரிய வந்ததையடுத்து. இது குறித்து அவர்கள் உடனடியாக செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கும்பகோணத்தை சேர்ந்த வென்மணி (23) என்பதும், தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் படித்துவருவதும் தெரியவந்தது. மேலும் 2014-15-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார். அடுத்த ஆண்டு அவரது ஆயுர்வேத படிப்பு முடிவு பெறுவதும் தெரியவந்தது.
சொந்த ஊருக்கு சென்றதால்...
விசாரணையில் அந்த ஆஸ்பத்திரியை நடத்தி வரும் டாக்டர் மணிவேல் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றிருப்பதால் அதற்கு பதிலாக வென்மணி டாக்டராக ஊசி போட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கியது தெரியவந்தது.
நாள் ஒன்றுக்கு ரூ.800 சம்பளத்திற்கு ஸ்ரீபெரும்பதூரில் இருந்து இங்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். மேலும் ஆஸ்பத்திரியை நடத்தி வரும் மணிவேலிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து வென்மணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.