கந்தச‌‌ஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கந்தச‌‌ஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2019-10-28 23:15 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தச‌‌ஷ்டி திருவிழா நேற்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் திரளான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள், கோவில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் இருக்கும் பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌‌ஷ்டி திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இங்குள்ள பழுதடைந்த விடுதிகளின் அறைகள் மூடப்பட்டதால், கூடுதலாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டைவிட கூடுதலாக குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு, திருச்செந்தூரில் 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சென்னை, மதுரை, நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவில் வளாகம், கடற்கரை பகுதியில் கூடுதலாக செல்போன் கோபுரங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கோவில் வளாகத்தில் மழைக்கால தொற்று நோய்கள் ஏற்படாத வகையில், சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயாராக உள்ளனர். பக்தர்களின் தேவைகளை கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

தமிழகத்தில் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்தான் பக்தர்கள் தங்குவதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய யாத்திரை நிவாஸ் கட்டப்பட உள்ளது. கோவில் கிரிப்பிரகாரத்தைச் சுற்றிலும் தற்காலிக மண்டபம் அமைக்கப்படும். அங்கு நிரந்தர கல் மண்டபம் அமைக்கும் வரையிலும், தற்காலிக மண்டபம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சண்முகநாதன் எம்.எல்.ஏ., திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், கோவில் செயல் அலுவலர் அம்ரித் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்