கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது

புதுவையில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-28 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை பாக்குமுடையான்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியாரிடம் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்டு கூடுதல் தொகைக்கு அடகு வைக்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 24-ந்தேதி வாடிக்கையாளர் ஒருவர் அழைப்பின்பேரில் ரூ.3 லட்சம் பணத்துடன் பங்கூர் ஏரிக்கரை ரோட்டில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது 2 மோட்டார்சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பணத்தை தருமாறு கத்திமுனையில் மிரட்டியுள்ளனர். அவர் தரமறுக்கவே அவரை கத்தியால் குத்திவிட்டு பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் பழனிவேலு, கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ், சரண்யா, ஏட்டுகள் ஜெயப்பிரகாஷ், ஆனந்த், முரளி, பெரியண்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் தமிழகம், புதுவை பகுதியை சேர்ந்த சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதாவது வில்லியனூரை சேர்ந்த சந்தோஷ் (வயது 19), கரிக்கலாம்பாக்கம் தேவன் (23), கரிக்கலம்பாக்கம் விநாயகம் (29), பாக்கம் கூட்ரோட்டை சேர்ந்த அறிவழகன் (26), கரிக்கலாம்பாக்கம் குட்டி விக்கி (25), தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்த சிலம்பரசன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து விசாரித்தபோது கடந்த 2-ந்தேதி அரியாங்குப்பத்தை சேர்ந்த ராமு என்பவரிடம் இருந்து ரூ.45 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோதிரத்தை வழிப்பறி செய்ததும், விழுப்புரம் திருமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமாரிடம் இருந்து ரூ.1.80 லட்சத்தை வழிப்பறி செய்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டர் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் பாராட்டினார்.

கைது செய்யப்பட்டுள்ள விநாயகம் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பல் இதேபோல் உள்ள பைனான்சியர்களுக்கு நகையை மீட்டு மீண்டும் அடகு வைக்கவேண்டும் என்று கூறி செல்போனில் அழைப்பு விடுக்கும். அதை நம்பி அவர்கள் பணத்துடன் வாகனங்களில் செல்லும்போது தங்கள் கூட்டாளிகளை வைத்து அவர்களை வழிமறித்து பணத்தை பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்