வனவிலங்குகளை வேட்டையாட சென்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி - 2 பேர் கைது
ஒடுகத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அணைக்கட்டு,
ஒடுகத்தூர் அருகே மேல் அரசம்பட்டு பங்களாமேடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் துஷ்வேந்தன் (வயது 16) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவர் தனது நண்பர்களான மனோகரன் (32) உள்பட 7 பேருடன் வனப்பகுதிக்கு சென்று விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்து அதில் வரும் பணத்தில் தீபாவளியை கொண்டாடலாம் என்று கடந்த 24-ந் தேதி ராசிமலை காட்டுக்கு சென்றனர்.
ராசிமலையில் மத்தியஅரசால் தோரியம் மற்றும் யுரேனியம் எடுக்கும் பணி நடந்து வருவதால் ராசிமலைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ராசிமலையில் விலங்குகளின் நடமாட்டம் இல்லாததால் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாட காடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தனர். 26-ந் தேதி காலை 7 பேரும் நான்கு திசைகளிலும் சென்று விலங்குகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் துஷ்வேந்தன் தாழ்வான பகுதிக்கு சென்று விலங்குகளை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக விலங்கு ஒன்று ஓடுவதை பார்த்த துஷ்வேந்தனின் 16 வயது நண்பர் ஒருவர், தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தாழ்வான பகுதியில் சென்று கொண்டிருந்த துஷ்வேந்தன் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அவரது நண்பர்கள் பயந்துபோய் துஷ்வேந்தனை காட்டிலேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். காட்டிற்கு துஷ்வேந்தன் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் துஷ்வேந்தனை சுட்ட நண்பர் நேற்று முன்தினம் மாலை வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்து நடந்த சம்பவத்தை கூறினார். அதைத்தொடர்ந்து ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, உமராபாத் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ராசிமலை வனப்பகுதிக்கு சென்று இறந்து கிடந்த துஷ்வேந்தனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து இறந்த துஷ்வேந்தனின் தாயார் கோமதி வேப்பங்குப்பம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 வயது நண்பர் மற்றும் மனோகரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.