திருவண்ணாமலையில் பெண் வனக்காப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலையில் பெண் வனக்காப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-10-28 23:30 GMT
திருவண்ணாமலை,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பாச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 50), ரெயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மேரி அல்போன்சா, தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு லாவண்யாதேவி (24), சங்கீதப்பிரியா (22) ஆகிய மகள்களும், தமிழ்செல்வன் (19) என்ற மகனும் உள்ளனர்.

லாவண்யாதேவி திருவண்ணாமலை வனச்சரகத்தில் உள்ள கன்னமடை தெற்கு பீட் பகுதியில் வனக்காப்பாளராக கடந்த 2-ந் தேதி முதல் வேலை செய்து வந்தார். இவர் திருவண்ணாமலை நகரம் சின்னக்கடை தெருவில் உள்ள வனத்துறை அலுவலக குடியிருப்பில் தங்கி வந்தார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் மாலை குடியிருப்பு பகுதியில் இருந்த லாவண்யாதேவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை வனவர் மனோகர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கும், லாவண்யாதேவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லாவண்யாதேவி கல்லூரியில் படிக்கும் போது வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தற்போது காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்