புயல் எச்சரிக்கை எதிரொலி குளச்சல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

குமரி கடல் பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், குளச்சல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Update: 2019-10-28 23:00 GMT
குளச்சல்,

அரபிக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் குமரி மேற்கு கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதையொட்டி மீன் வளத்துறை அதிகாரிகள் குமரி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மீன்வளத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கை எதிரொலியாக குளச்சல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டுள்ள சுமார் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000–க்கும் மேற்பட்ட வள்ளங்கள், கட்டுமரங்களும் நேற்று கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் தேங்காப்பட்டணம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்ட 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும், கடலுக்கு சென்ற விசைப்படகுகளும் சூறைக்காற்று காரணமாக கரை திரும்பின.

இதற்கிடையே துறைமுகம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள் மீண்டும் மீன்பிடிக்க செல்வதற்காக ஐஸ்கட்டிகள், குடிநீர் போன்றவை ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்