தேர்தல் தோல்விக்காக யார் மீதும் பழிபோடக்கூடாது - கண்ணன் சொல்கிறார்

தேர்தல் தோல்விக்காக யார் மீதும் பழிபோடக் கூடாது என்று மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் கூறினார்.

Update: 2019-10-26 23:00 GMT
புதுச்சேரி,

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை மக்கள் தங்களது தீர்ப்பினை வழங்கி உள்ளனர். மக்கள் தீர்ப்பினை ஏற்பதுதான் ஜனநாயக கடமை. நான் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததை ஒத்துக்கொள்கிறேன். வாக்காளர்களை கவனிப்பது என்ற முறை வந்த பிறகு தேர்தல் நடத்துவது கஷ்டமாக உள்ளது என்று தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையரே பகிரங்கமாக கூறியுள்ளார்.

இந்த தேர்தல் குறித்து என்.ஆர்.காங்கிரசார் குற்றஞ்சாட்டி உள்ளனர். தோற்றபின் இவ்வாறு சொல்வது கஷ்டமாக உள்ளது. அதற்காக யார் மீதாவது பழிபோடக்கூடாது. கடந்த காலங்களில் தவறுகள் நடக்கும்போது தட்டிக்கேட்டிருந்தால் தேர்தல் அணுகு முறைகளை மாற்றி இருக்கலாம்.

ரங்கசாமி முதல்-அமைச்சராக இருக்கும்போது எல்லாம் தேர்தல் சரியாகத்தான் நடந்ததா? மன்மோகன்சிங் பிரதமராக இருந்ததைவிட இப்போது மோசமாக போகிறது. ஊழலை இவர்கள் ஒழித்துவிட்டார்களா? ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் அரசு ஊழியர்களை தவறு செய்ய வைக்கிறார்கள்.

நான் இந்த தேர்தல் களத்துக்கு வெறுங்கையோடுதான் வந்தேன். அதேபோல் வெறுங்கையோடுதான் வெளியேறினேன். என் கட்சியைவிட நோட்டா அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நான் தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர்கள் பிடிக்காவிட்டால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்றுதான் கூறினேன்.

நாங்கள் தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடுவோம். தேவைப்பட்டால் கட்சியில் என் தலைமை மாறுமே தவிர கட்சி தொடர்ந்து நீடிக்கும். அரசியல்வாதிகளிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதற்காக என் தலைமை மாற்றப்பட வேண்டும் என்றால் மாற்றப்படும்.

இவ்வாறு கண்ணன் கூறினார்.

மேலும் செய்திகள்