அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ கோடி மோசடி 4 பேர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.3½ கோடி மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-26 22:34 GMT
சென்னை,

சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை, மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பணி, ஆசிரியர் பணி உள்பட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி விஸ்வேஸ்வர்(வயது 29) என்பவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் வேலை தேடும் அப்பாவி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போலி ஆணைகள் வழங்கப்பட்டு வந்தது தெரிந்தது.

சென்னை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 73 பேரிடம் ரூ.3½ கோடி வரை மோசடி நடந்து இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக விஸ்வேஸ்வர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்களான பெரம்பூரை சேர்ந்த ராஜபாண்டி, வில்லிவாக் கத்தை சேர்ந்த ராஜூ, மதுரையை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்