சபாநாயகரை எதிர்த்து பேசிய சித்தராமையாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
சபாநாயகரை எதிர்த்து பேசிய சித்தராமையாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். உப்பள்ளி விமான நிலையத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உப்பள்ளி ,
நாட்டின் வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகரை எதிர்த்து பேசியதில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, சபாநாயகர் விஸ்வேசுவரஹெக்டே காகேரியை எதிர்த்து பேசியுள்ளார். இதற்காக சபாநாயகரிடம் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், சித்தராமையாவுக்கு எதிராக அடுத்து நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரின் போது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்படும்.
இதுதொடர்பாக எம்.எல். ஏ.க்களுடன் ஆலோசிக்கப்படும். அதன்பிறகு, சித்தராமையாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும். சபாநாயகர் பற்றி பேசும்போது, சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். சித்தராமையா வாய்க்கு வந்ததை பேசிய காரணத்தால் தான், சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டினார்கள். அதனை சித்த ராமையா மறந்து விடக் கூடாது.
ஒவ்வொரு தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது காங்கிரஸ் கட்சி தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. நாட்டில் காங்கிரஸ் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் யார்? என்பதே பலருக்கு தெரியவில்லை. காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் நோக்கம். அது தற்போது நிறைவேறி வருகிறது. மராட்டியம் மற்றும் அரியானாவில் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை அந்த மாநில மக்கள் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் படகு.
இடைத்தேர்தல் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அனைவரிடமும் கருத்து கேட்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வி அடைவார்கள். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.