நிறுத்தி வைத்திருந்த இடம் தெரியாமல் மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக கூறிய வாலிபரால் பரபரப்பு

திருப்பூரில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்த இடம் தெரியாமல், மோட்டார் சைக்கிள் திருட்டு போனதாக கூறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Update: 2019-10-26 23:30 GMT
திருப்பூர்,

தீபாவளி பண்டிகைக்காக திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் துணி எடுப்பதற்காக நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் வந்தார். தனது இருசக்கர வாகனத்தை அருகில் உள்ள சாலையில் நிறுத்தி விட்டு துணிக்கடைக்கு சென்று துணி எடுத்தார். பின்னர் இரவு வெளியே வந்து தனது மோட்டார் சைக்கிளை பார்த்த போது காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தனது மோட்டார் சைக்கிளின் பதிவு எண், வாகனத்தின் அடையாளத்தை கூறி, திருட்டு போய்விட்டதாக தெரிவித்தார். உடனடியாக திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள்.

மோட்டார் சைக்கிளை விட்டுச்சென்ற இடம் இது தான் என்று அந்த வாலிபர் ஒரு இடத்தை போலீசாரிடம் தெரிவித்தார். நிறைய இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. ஆனால் அந்த ரோட்டில் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் இல்லை. மாநகரம் முழுவதும் உள்ள போலீசாருக்கு மோட்டார் சைக்கிள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. இருப்பினும் போலீசார் குமரன் ரோடு, சபரி சாலை, பென்னி காம்பவுண்ட் சாலை பகுதி முழுவதும் தீவிரமாக தேடினார்கள்.

இதில் சபரி சாலையில் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை சபரி சாலையில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வந்து இடம் தெரியாமல் பென்னி காம்பவுண்ட் சாலையில் சென்று தனது மோட்டார் சைக்கிளை தேடி, காணாதது கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தது தெரியவந்தது. சுமார் 2 மணி நேரமாக போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பிறகு மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டு அந்த வாலிபரிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு போலீசார் சென்றனர்.

மேலும் செய்திகள்