தஞ்சையில் அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்

ஊதிய உயர்வு வழங்கக்கோரி தஞ்சை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2019-10-26 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் நீடித்தது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம் ஆகியவற்றில் பணியாற்றும் பெரும்பாலான டாக்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் பரிசோதனைகள், சிகிச்சைகள் எதையும் டாக்டர்கள் மேற்கொள்ளாததால் புறநோயாளிகள் சேவை முற்றிலும் முடங்கியது.

நோயாளிகள் அவதி

இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். நோயாளிகள் சிரமத்தை போக்கும் வகையில் பயிற்சி டாக்டர்கள் சிலர், பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்தனர். பொதுமக்கள் நலன்கருதி உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவும், மகப்பேறு மருத்துவ பிரிவும், காய்ச்சல் பிரிவும் மட்டும் செயல்பட்டது.

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஊர்வலத்திலும் ஈடுபட்டனர். ஊர்வலத்துக்கு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அகிலன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் ராஜேஸ்ராம், ஜீவானந்தம், பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் மருத்துவக்கல்லூரி முன்பு இருந்து தொடங்கி வளாகத்தை சுற்றி மீண்டும் தொடங்கிய இடத்தை வந்தடைந்தது. அங்கு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்