வாணியம்பாடி அருகே, 2 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சி
வாணியம்பாடி அருகே 2 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.;
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் பஸ் நிறுத்தம் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. தீபாவளி பண்டிகை என்பதால் ஏ.டி.எம். எந்திரத்தில் அதிக அளவில் பணம் வைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்துக்கு காவலாளி இல்லை.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளனர். பின்னர் ஏ.டி.எம்.மில் பணம் இருக்கும் பகுதியை உடைக்க முயன்றனர். அது முடியாததால், அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதேபோல், அம்பலூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெக்குப்பட்டு தேசிய நெடுஞ்சாலையையொட்டி தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கும் காவலாளி கிடையாது.
இந்த மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். உடைக்க முடியாததால் மர்ம நபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தின் உள்புறம், வெளிபுறங்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.