40 சதவீத மானியத்தில் மீன்பிடி வலை, பரிசல் வாங்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
40 சதவீத மானியத்தில் மீன்பிடி வலை, பரிசல்களை வாங்க மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை,
தமிழ்நாட்டில் உள்ள உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்தவும், அவர்களின் வருவாயினை பெருக்கவும் உள்நாட்டு மீனவர்களுக்கு மானியத்தில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வழங்கப்படுகிறது.
2019-20-ம் ஆண்டிற்கு மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வாங்கிட 40 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டத்தின் கீழ் நிபந்தனைகளின் பேரில் வழங்கப்படும்.
அதில், முழுநேர மீன்பிடிப்பில் ஈடுபடும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பங்கு முறையில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் மீன்பிடி வலைகள் கடந்த 3 ஆண்டுகளுக்குள்ளும், பரிசல்கள் 5 ஆண்டுகளுக்குள்ளும் வாங்கிய வகையில் மானியத் தொகை பெற்றிருக்க கூடாது. பயனாளிகளில் சொத்து உருவாக்கம் செய்யப்பட்ட பிறகு ஆய்வின் அடிப்படையிலேயே மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ECS மூலம் விடுவிக்கப்படும். குடும்ப அட்டைகளின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
நைலான் மீன்பிடி வலைகள் ஒரு பயனாளிக்கு 20 கிலோ வீதம் ரூ.20 ஆயிரம் மதிப்பில் வலைகள் வாங்குவதற்கு அதிகபட்சமாக 40 சதவீதம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். பரிசல் ரூ.15 ஆயிரம் மதிப்பானது. பரிசல்கள் டாப்கோபெட் மூலம் வினியோகம் செய்யப்படும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு மீனவ பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள வேலூர் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தேவையான விவரங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.