திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் கேட்டு திடீர் போராட்டம் நடத்தினார்கள்.;
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்கி வருகின்றன. விமான பயணிகளின் பெட்டிகள், சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களை (லக்கேஜ்) ஏற்றி இறக்கும் பணியை ஒரு தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஒரு ஷிப்டுக்கு 70 தொழிலாளர்கள் வீதம் 3 ஷிப்டுகளில் 210 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த தொழிலாளர்களில் சுமார் 100 பேர் நேற்று இரவு 7 மணி அளவில் திடீர் என போராட்டத்தில் குதித்தனர். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என கேட்டு இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் விமான நிலையத்தின் பழைய முனைய வளாகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தினால் விமான பயணிகளின் பொருட்களை ஏற்றி இறக்கும் பணி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சனிக்கிழமை இரவுக்குள் போனஸ் வழங்கப்படவேண்டும், அதற்கான உத்தரவாதத்தை தனியார் நிறுவனத்தின் தலைமை அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றார்கள். தொழிலாளர்கள் வைத்த இந்த கோரிக்கையை தனியார் நிறுவன அதிகாரிகளிடம் விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார். அதற்கு தனியார் நிறுவன அதிகாரிகள் வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் போனஸ் வழங்கப்படும் என அளித்த உறுதியை விமான நிலைய இயக்குனர் போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் இரவு 10 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.