சேலத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்
சேலத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
சேலம்,
பதவி உயர்வு வழங்க வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் 25-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள் பலர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் டீன் அலுவலகம் முன்பு அமர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தோம். ஆனால் அரசு அறிவித்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் டாக்டர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இன்று (நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள், தாலுகா மருத்துவமனை டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் என சேலம் மாவட்டம் முழுவதும் 450-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளோம்.
அவசர சிகிச்சை மற்றும் காய்ச்சல் பிரிவில் மட்டும் டாக்டர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர். டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.