சிதம்பரத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

சிதம்பரத்தில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-10-25 23:00 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் 7-வது வார்டுக்குட்பட்ட காரிய பெருமாள் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் சாலை, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் காணப்படும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் இணைந்து பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், மாதர் சங்க செயலாளர் மல்லிகா, தலைவர் அமுதா, பொருளாளர் ஞானமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் ராமமூர்த்தி, கலியமூர்த்தி, செந்தில் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு சேறும் சகதியுமான, சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்