போடி அருகே தொடர் மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

போடி அருகே தொடர்ந்து பெய்து வந்த மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.

Update: 2019-10-25 22:30 GMT
போடி,

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சிலமலையை சேர்ந்தவர் பொன்னையா. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 72). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னையா இறந்து விட்டார். இதனால் சிலமலை- மணியம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் குடிசை வீட்டில் செல்லம்மாள் மட்டும் வசித்து வந்தார்.

போடி பகுதியில் நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் செல்லம்மாள் வெளியே வராமல் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்தார். நேற்று காலையில் அவருடைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கிடந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது சுவரின் இடிபாடுகளுக்கு இடையே செல்லம்மாள் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து செல்லம்மாளின் உடலை மீட்டனர். தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து பெய்த மழைக்கு அவருடைய வீட்டின் சுவர் நனைந்து இடிந்து விழுந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போடி பகுதியில் மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்