திருவாரூர் மாவட்டத்தில் 91 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் - அதிகாரி தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் 91 நேரடி நெல் கொள்முதல் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகபட்ச அளவில் பயன்பெறும் வகையிலும், விலை வீழ்ச்சியின் பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. நடப்பு கொள்முதல் பருவத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இங்கு மின்னணு கொள்முதல் முறையின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
திருவாரூர் அருகே உள்ள சேங்காலிபுரம், வடவேர் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் நெல் கொள்முதல் பணிகளில் எந்தவித இடையூறு இன்றி கொள்முதல் செய்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் 91 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. நெல்லை விற்பனை செய்யும்போது விவசாயி நில உடமை ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு எண் புத்தகத்தின் நகலினை கொண்டு வர வேண்டும். விவசாயிகள் தங்களின் நெல்லினை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும்போது ஏதாவது குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணை மேலாளர் ரெங்க நாதன் உடன் இருந்தார்.