டியூசன் ஆசிரியைக்கு கத்திக்குத்து: பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

அருமனை அருகே டியூசன் ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திய விவகாரத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவன் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Update: 2019-10-25 23:30 GMT
அருமனை,

அருமனை அருகே கடையாலுமூடு பகுதியில் பி.எஸ்.சி., பி.எட். படித்த 23 வயதுடைய பட்டதாரி பெண் ஒருவர் தனது வீட்டில் டியூசன் நடத்தி வருகிறார். இவரிடம் பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் டியூசன் படித்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆசிரியை வீட்டில் தனியாக இருந்த போது பிளஸ்-1 மாணவன் தகாத முறையில் நடக்க முயன்றான்.

இதனால் பயந்துபோன ஆசிரியை அலறினார். உடனே அந்த மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான். இதில் பலத்த காயம் அடைந்த ஆசிரியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கடையாலுமூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆலஞ்சோலை மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கயாலக்கல் சந்திப்பில் ஆலஞ்சோலை பங்குதந்தை வின்சோ ஆன்றனி மற்றும் கடையல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேகர், சத்தியராஜ் ஆகியோர் தலைமையில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது மாணவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர். இந்த தகவல் அறிந்த கடையாலுமூடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்