கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
பெரம்பலூர்,
தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியிடங்களை குறைக்கக்கூடாது. அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்திட வேண்டும். தமிழக சுகாதாரத்தின் அடித்தளம் காத்திட அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நேற்று பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் மருத்துவமனைகளில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவசர சிகிச்சைகள் பாதிப்பின்றி மற்ற பிரிவுகளை புறக்கணித்து டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கிருஷ்ணாபுரம், வேப்பூர், காரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார அலுவலகங்களில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு செவிலியர்கள் மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்தனர். தற்போது காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்நிலையில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் டாக்டர்களிடம் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் நேற்று வழக்கம்போல் பணிபுரிந்தனர். ஆனால் அவர்களும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பயிற்சி வகுப்புகள், கூட்டங்களை புறக்கணித்து வருகின்றனர். மேலும் அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் வருகிற 30, 31-ந் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.