திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோ உரிமையாளர் கொலை: அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
திருச்செந்தூர் அருகே நடந்த லோடு ஆட்டோ உரிமையாளர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் அருகே நடந்த லோடு ஆட்டோ உரிமையாளர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
ஆட்டோ உரிமையாளர்
செங்கல்பட்டை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 24), லோடு ஆட்டோ உரிமையாளர். இவருடைய வீட்டின் அருகில் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிக்குடியிருப்பை சேர்ந்த பொன்பெருமாள் மகன் முத்துராஜ் (35) மற்றும் அவருடைய நண்பர்களான லிங்கதுரை மகன்கள் முத்துக்குமார் (32), ஜெயபாரத் என்ற பாரத் (29) ஆகியோர் பழைய இரும்பு கடை நடத்தி வந்தனர்.
இதனால் அருண்குமாருக்கும், இரும்பு கடை நடத்தி வந்த 3 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நண்பர்களாக பழகி வந்தனர்.
அடித்துக்கொலை
இந்தநிலையில் அருண்குமாரின் லோடு ஆட்டோவை அபகரிக்க முத்துராஜ், முத்துக்குமார், ஜெயபாரத் என்ற பாரத் ஆகியோர் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 1-5-2010 அன்று முத்துராஜின் வீட்டில் இருந்து பொருட்களை ஏற்றி வர வேண்டும் என்று கூறி அருண்குமாரை லோடு ஆட்டோவுடன் பிச்சிக்குடியிருப்புக்கு அழைத்து வந்தனர். அவர்கள் வரும் வழியில் கானம் பகுதியில் ஓய்வு எடுத்தனர். அப்போது திடீரென 3 பேரும் சேர்ந்து, அருண்குமாரை அடித்து கொலை செய்தனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது உடலை தீவைத்து எரித்து விட்டு ஆட்டோவுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் அவர்கள், அந்த ஆட்டோவை உசரத்துகுடியிருப்பை சேர்ந்த சின்னத்துரை(40) என்பவரிடம் விற்றனர்.
ஆயுள் தண்டனை
இந்த நிலையில் எரிந்த நிலையில் உடல் கிடந்தது குறித்து குதிரைமொழி கிராம நிர்வாக அலுவலர் லதா அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அருண்குமாரை எரித்து கொலை செய்த முத்துராஜ், முத்துக்குமார், ஜெயபாரத் மற்றும் திருட்டு ஆட்டோவை வாங்கிய சின்னத்துரை ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், குற்றம் சாட்டப்பட்ட முத்துராஜ், அண்ணன்-தம்பியான முத்துக்குமார், ஜெயபாரத் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.6 ஆயிரம் அபராதமும், திருட்டு ஆட்டோவை வாங்கிய சின்னத்துரைக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் யு.எஸ்.சேகர் ஆஜர் ஆனார்.