கந்திலி அருகே, சந்தனமரம் வெட்டி கடத்த முயன்ற கும்பல் வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கந்திலி அருகே சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற கும்பலில் ஒரு வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர்,
கந்திலி ஒன்றியம், லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் நரசிம்ம ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு ஒரு சந்தன மரம் வளர்ந்து வருகிறது. இந்த சந்தன மரத்தை நேற்று முன்தினம் இரவு 4 பேர் கொண்ட கும்பல் வெட்டியது.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் (வயது 38) என்பவர் அந்த வழியாக வரும்போது மரத்தை வெட்டுவதை பார்த்து கூச்சல் போட்டார். இதனால் 4 பேரும் தப்பி ஓடினர். அவர்களை துரத்திய போது கீழே விழுந்த சுதாகருக்கு கால் எலும்பு உடைந்தது. அவரின் கூச்சல் கேட்டு ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி தப்பி ஓட முயன்ற ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவரை கந்திலி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், சிம்மனபுதூர் கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் (22) என தெரிந்தது.
இதையடுத்து சுதாகரை கொலை செய்ய முயன்றதாகவும், சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றதாகவும் வேடியப்பன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வேடியப்பனை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.