கர்நாடகத்தில் புதிய கல்விகொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
கர்நாடகத்தில் விரைவில் புதிய கல்விகொள்கை அமல்படுத்தப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
மங்களூரு,
கர்நாடகத்தில் விரைவில் புதிய கல்விகொள்கை அமல்படுத்தப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பா.ஜனதா வெற்றி பெறும்
மங்களூரு-உடுப்பியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு நேற்று வந்தார். மங்களூரு பஜ்பே விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும். கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் நிலை பற்றி எல்லாருக்கும் தெரியும். எங்கள் வெற்றிக்கு எந்த தடையும் இருக்காது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்து உள்ளது. அவர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகள், அரசுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் உள்ளது. பரமேஸ்வர் மருத்துவ கல்லூரிகளில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்து உள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அறிக்கை கிடைத்த பின்னர் தவறு நடந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.
புதிய கல்வி கொள்கை
பா.ஜனதா அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றும், வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை எனவும் தகுதிநீக்க எம்.எல்.ஏ. பி.சி.பட்டீல் கூறியுள்ளார். கடந்த கூட்டணி அரசு ரூ.40 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்து இருந்தது. அதில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரீசிலனை செய்து வருகிறது.
மேலும் கூட்டணி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை பா.ஜனதா அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் புதிதாக வளர்ச்சி பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. அடுத்த பட்ஜெட்டில் புதிய நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும். மத்திய அரசின் புதிய கல்விகொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளது. அந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு விரைவில் மாநிலத்தில் புதிய கல்விகொள்கை அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் கார் மூலம் உடுப்பிக்கு புறப்பட்டு சென்ற அஸ்வத் நாராயண் மணிப்பாலில் குறைமாத குழந்தைகளுக்கான ‘பயோ இன்கு பேடர்’ மைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.