சத்தாரா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி
மராட்டியத்தில் உள்ள சத்தாரா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் உதயன் ராஜே போஸ்லே படுதோல்வி அடைந்தார்.;
புனே,
மராட்டியத்தில் உள்ள சத்தாரா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் உதயன் ராஜே போஸ்லே படுதோல்வி அடைந்தார். இவர் தேசியவாத காங்கிரசில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.
உதயன் ராஜே போஸ்லே
மராட்டியத்தில், நாடாளுமன்ற தேர்தலின் போது சத்தாரா தொகுதியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியான உதயன்ராஜே போஸ்லே வெற்றி பெற்று இருந்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த உதயன்ராஜே போஸ்லே தொடர்ந்து 3-வது முறையாக அக்கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார்.
ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் சோபிக்காத விரக்தியில் அரசியல் ஆதாயம் தேடி பா.ஜனதா, சிவசேனாவுக்கு தாவிய அக்கட்சி தலைவர்களின் வரிசையில் உதயன் ராஜே போஸ்லேவும் திடீரென கடந்த மாதம் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார்.
படுதோல்வி
உதயன்ராஜே போஸ்லே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காலியான அந்த தொகுதிக்கும் மராட்டிய சட்டசபை தேர்தல் நடந்த கடந்த 21-ந் தேதி அன்று தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா வேட்பாளராக உதயன்ராஜே போஸ்லே களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீனிவாஸ் பாட்டீல் போட்டியிட்டார். இந்தநிலையில் நேற்று சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையோடு சத்தாரா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. இதில், உதயன்ராஜே போஸ்லே 87 ஆயிரத்து 717 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் பாட்டீல் அமோக வெற்றி பெற்றார்.