பா.ஜனதா மாநில தலைவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் ஓமலூரில் இல.கணேசன் பேட்டி

தேர்தல் நடத்தி அதன் மூலம் தமிழக பா.ஜனதா தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஓமலூரில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

Update: 2019-10-24 23:00 GMT
ஓமலூர்,

சேலம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி, மாமல்லபுரத்தில் 2 நாட்கள் தங்கி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்து உள்ளார். இது கூட இடைத்தேர்தலின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

அரியானா, மராட்டிய மாநில தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியினரின் பொய் பிரசாரத்தை நம்பி தமிழக மக்கள் மாற்றி ஓட்டு போட்டனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது.

சிலர் தவறான பிரசாரம் மூலம் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என கனவு கண்டு வருகின்றனர். அது பலிக்காது. பா.ஜனதா கட்சியில் தேர்தல் நடத்தி ஒன்றிய, மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுப்பது போல பா.ஜனதா மாநில தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த தீபாவளி பண்டிகைக்கு தமிழக மக்கள் வேட்டி, சேலை என ஒரு கதர் ஆடையாவது வாங்க வேண்டும். பா.ஜனதாவினர் கண்டிப்பாக கதர் ஆடை வாங்கவேண்டும். பட்டாசு வாங்கும்போது சீனா பட்டாசு, வெளிநாட்டு பட்டாசு வாங்குவதை தவிர்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

நடைபயணம்

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட பா.ஜனதா சார்பில் சமூக விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். மாநில அறிவுசார் பிரிவு தலைவர் கனகசபாபதி முன்னிலை வகித்தார். மூத்த தலைவர் இல.கணேசன் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம், ஓமலூர் பஸ்நிலையம், மேட்டூர் மெயின் ரோடு, கடை வீதி, தர்மபுரி மெயின்ரோடு வழியாக சென்று ஓமலூர் பஸ்நிலையத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு, இல.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் ரவி, செயலாளர் மகேஷ்வரன், சத்தியமூர்த்தி மாநில செயற்குழு உறுப்பினர்கள் மகாதேவன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்