வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது 19¼ பவுன் நகைகள் மீட்பு

ராசிபுரம், பள்ளிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் 19¼ பவுன் நகைகளை மீட்டனர்.

Update: 2019-10-24 23:00 GMT
நாமக்கல்,

ராசிபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் முரளி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி மர்மநபர் 3 பவுன் நகைகளை திருடி சென்றார்.

இதேபோல் பள்ளிபாளையம் அருகே உள்ள காடச்சநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த ஜான்பால் என்பவரது வீட்டில் செப்டம்பர் மாதம் 23-ந் தேதி இரவு பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருடப்பட்டது. இதேபோல் காடச்சநல்லூர் கூட்டுறவு நகரை சேர்ந்த கருணாநிதி என்பவரின் வீட்டில் அக்டோபர் மாதம் 3-ந் தேதி இரவு வீட்டின் பூட்டை உடைத்து 8¾ பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றார்.

தனிப்படை அமைப்பு

மல்லசமுத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருமனூர் மாரிமுத்து என்பவர் வீட்டில் அக்டோபர் மாதம் 10-ந் தேதி இரவு பூட்டை உடைத்து 4½ பவுன் நகைகள் திருடப்பட்டன. இந்த திருட்டு வழக்குகள் தொடர்பாக ராசிபுரம், பள்ளிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இவ்வழக்குகளில் துப்புதுலக்க ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி மற்றும் மல்லசமுத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வாலிபர் கைது

தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மோர்பாளையம் பஸ்நிறுத்தம் அருகில் நின்றிருந்தவரை எழுப்பி விசாரித்தனர். சந்தேகத்தின் பேரில் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரை கூடல்நகரை சேர்ந்த மாயக்கண்ணன் என்ற வெற்றிவேல் (வயது 26) என்பதும் ராசிபுரம், மல்லசமுத்திரம், பள்ளிபாளையம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் திருட்டுபோன 19¼ பவுன் நகைகளை மீட்டனர். திருட்டு வழக்கில் துப்புதுலக்கி கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார். 

மேலும் செய்திகள்